2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி அக்காலத்தில் ஆயுத ரீதியாக பலமான நிலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைவுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கூட்டு இரு தசாப்தங்களின் பின்னர் முறிவடைந்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பில் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தில் தனித்தே போட்டியிடுவதென பெரும்பான்மையோர் சிபார்சு செய்து ஆதரவினை வெளியிட்டிருந்த நிலையில் அதுதொடர்பில் தீர்க்கமான தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான கூட்டமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்காளிக்கட்சியின் தலைவர்களான மாவை.சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஆர்.ராகவன், எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் ஆரம்பமான கூட்டத்தில் முதலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு கூட்டத்தில் பெரும்பான்மையோரால் சிபார்சு செய்யப்பட்ட ‘தனித்துப் போட்டி’ குறித்து சம்பந்தன், மாவை.சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
குறிப்பாக, தற்போதுள்ள 60க்கு 40என்ற கலப்பு தேர்தல் முறைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தற்போது உள்ள மூன்று அரசியல் கட்சிகளும் தனித்தியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக சபைகளில் ஆட்சி அமைக்க முடியும். அதன் மூலம் அனைத்து சபைகளும் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் கொண்டுவரமுடியும் என்ற விடயத்தினை சுமந்திரன் தொழிநுட்ப ரீதியாக விபரித்தார்.
அவருடைய கருத்தினை ஏற்று சம்பந்தனும் கூட்;டமைப்பில் உள்ள கட்சிகளும் தனித்தினயாக போட்டியிடுவது தான் பொருத்தமானது என்று கூறினார்.
இதன்போது செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ராகவன் ஆகியோர் இலங்கை தமிழரசுக்கட்சி ஏற்கனவே தீர்மானத்தினை எடுத்துவிட்டது என்பதை நாம் அறிந்துள்ளோம். அதேநேரம், வேட்புமனுக்களை தயார்ப்படுத்தும் ஆரம்பகட்டச் செயற்பாடுகளையும் தொடங்கியுள்ளதாக எமக்கு அறியக் கிடைக்கின்றது.
அவ்வாறிருக்கையில் தீர்மானமொன்றை எடுத்ததன் பின்னர் எவ்வாறு கலந்தாலாய்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது, மாவையும் சுமந்தினும் அவ்வாறான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்கள். குறிப்பாக சுமந்திரன், ஊடகங்கள் தான் தனித்தனியாக போட்டி என்று தவறான வெளிப்படுத்தல்களைச் செய்துவிட்டன என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், உங்களின்(செல்வம், ராகவன்) ஆகியோரின் யோசனைகளைக் கூறுங்கள் என்றும் கோரியுள்ளார்.
அச்சமயத்தில், செல்வம் அடைக்கலநாதன், எம்மைப்பொறுத்தவரையில் நாம் கடந்த காலத்தில் தேர்தலுக்கு முகங்கொடுத்ததைப் போன்றே இம்முறையும் கூட்டாக முகங்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும், புளொட் பிரதிநிதியான ராகவன், கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் தேர்தல் ஒதுக்கீடுகளை பிரதி செய்யமுடியாது. ஏனெனில் கடந்த காலத்தில் தமிழரசுக்கட்சி எமக்கு மூன்று சபைகளை வழங்குவதாக கூறியபோதும் அவ்வாறு இணங்கியதற்கு ஏற்ப செயற்படவில்லை. அதேபோன்று கிளிநொச்சியில் எமது உறுப்பினர்களை புறந்தள்ளி தனியாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களே உள்வாங்கப்பட்டார்கள்.
ஆகவே இம்முறை ஒதுக்கீடுகள் குறித்து புதிதாக பேச வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.
அதன்போது, சம்பந்தன் மீண்டும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவினுடைய பெரும்பான்மையானவர்களின் சிபார்சை சுட்டிக்காட்டி இம்முறை தனித்தனியாக முகங்கொடுத்து பின்னர் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதே பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.
அத்துடன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ராகவன் ஆகியோர் கோருவதன்படி கூட்டாக முகங்கொடுப்பதாக இருந்தால் மாவட்ட ரீதியாகச் சென்று கட்சியின் ஆதரவாளர்களின் கருத்துக்களை கோரிய பின்னர் இறுதி முடிவினை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், செல்வம் அடைக்கலநாதன், அவ்வாறு மாவட்ட ரீதியாகச் சென்று இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு போதிய காலம் இல்லை. அதேநேரம், அவ்வாறு கருத்துக்களை கோரி இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்ற தருணத்தில் நாம் தனித்துச் செல்லவேண்டி ஏற்படுமாயின் தேர்தலை முகங்கொடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இருக்காது.
ஆகவே அந்த முயற்சியானது நடைமுறைச்சாத்தியமற்றது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை ராகவனும் ஆதரித்துள்ளார்.
இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் பெரும்பான்மையினரின் தீர்மானப்படியே தனித்துபோட்டியிடம் நாம் தனித்தோ கூட்டமைப்பாகவோ களமிறங்குவோம். அதில் நீங்கள் தலையீடுகளைச் செய்யமுடியாது என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அதேகருத்தினை ராகவனும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஈற்றில், தேர்தலில் தனித்தோ கூட்டாகவோ முகங்கொடுப்பது பற்றி
தீர்மானம் எடுப்பதற்கு உங்களுக்கு முழு உரித்தும் உள்ளது. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் நாம் சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் கூடிப்பேசுவோம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இப்பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்துள்ளது. அதன் பின்னர் செல்வம் மற்றும் ரகவன் ஆகியோர் பேச்சுக்களை தொடராது வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஆர்.ராகவன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,
சுமந்திரன் கூறுகையில்,
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு சிபார்சு தொடர்பில் ரெலோ , புளொட்டுடன் பேச்சுக்களை முன்னெடுத்தோம். அவர்கள் கூட்டமைப்பாகவே போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
எனினும் தனித்தனியாக போட்டியிடுவதால் ஏற்படும் தொழில்நுட்ப ரீதியான நன்மைகள் பற்றி அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்களின் விருப்பப்படி கூட்டமைப்பாக போட்டியிடுவதானால் மாவட்ட ரீதியாக கருத்துக்களை பெற்று தீர்மானம் எடுப்போம் என்றும் கூறினோம். ஈற்றில் அவர்கள் அதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் அவர்கள் தனியாகவோ அல்லது வேறு கூட்டிலோ போட்டியிடுவதற்கான தீர்மானம் எடுப்பதற்கு முழுமையான உரித்தும் உள்ளது. எனினும் அவர்கள் கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்த முடியாது. தேர்தல் நிறைவின் பின்னர் அவர்களுடன் பேசத்தயாராகவே உள்ளோம் என்றார்.
செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில்,
தமிழரசுக்கட்சி மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை வலுப்படுத்தும் வகையில் தான் பேச்சக்களை நகர்த்த முற்பட்டது. நாம் கடந்த தடவைபோன்று கூட்டமைப்பாக தேர்தலை முகங்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததோடு அதனை வலியுறுத்தினோம்.
இருப்பினும் தமிழரசுக்கட்சி அதற்கு சம்மதித்திருக்கவில்லை. ஈற்றில் தமிழரசுக்கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாகச் செல்வது உறுதியாகியுள்ளது என்றார்.
ஆர்.ராகவன் கூறுகையில்,
எமது கட்சியின் தலைவர் சித்தார்த்தனுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தேன். அ;ந்தக் கூட்டத்தில் மிகத் தெளிவாக எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தினோம்.
எனினும், தமிழரசுக்கட்சி மத்திய குழுவின் பெரும்பான்மை முடிவினை அமுலாக்குவதிலேயே உறுதியாக இருந்தது. அதற்கு அப்பால் எம்மால் நெகிழ்வுத்தன்மையுடன் பேச்சுக்களை நகர்த்த முடியாது போனது என்றார்.