வெள்ளை மாளிகைக்கு அரசியல் சங்கடம் வளர்ந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உதவியாளர்கள் ரகசிய அரசாங்க பதிவுகள் அடங்கிய புதிய தொகுப்பை இரண்டாவதாக மற்றுமோர் இடத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
பைடன் துணை அதிபராக இருந்த பிறகு பயன்படுத்திய ஆவணங்களின் முதல் தொகுப்பு, வாஷிங்டன் டிசியில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் அமெரிக்க நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது.
ரகசிய கோப்புகளைத் தவறாகக் கையாண்டதாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படவுள்ளது.
பைடன் உதவியாளர்களால் கூடுதல் கோப்புகள் எப்போது, எங்கே கண்டுபிடிக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
சுமார் 10 ஆவணங்களின் தொகுதி நவம்பரில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு சிந்தனைக் குழுவான பென் பைடன் (Penn Biden Center) மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த விஷயம் இந்த வாரத்தில் தான் வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த ஆவணங்களில் யுக்ரேன், ஈரான், பிரிட்டன் தொடர்பான அமெரிக்க உளவுத்துறை குறிப்புகளும் விளக்கப் பொருட்களும் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோப்புகள் குறித்து வெள்ளை மாளிகை இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. முன்னதாக, புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரீன் ஜீந்பியர் தினசரி செய்தியாளர் சந்திப்பின்போது கோப்புகளின் முதல் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
“அது நீதித்துறையின் பரிசீலனையில் உள்ளது. அதிபர் நேற்று தெரிவித்த விஷயங்களைத் தாண்டி நான் எதுவும் சொல்ல இயலாது,” என்று அவர் கூறினார்.