எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தின் முக்கால் பகுதி நேரம் வரை விரைந்து சென்று கொண்டிருந்த இந்திய அணி கடைசியில் தோற்றுப் போனதால் அதன் ஹாக்கி உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது.
ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட், சடன் டெத் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் இரு அணிகளும் 3-3 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன.
முதல் பெனால்டி ஷூட் அவுட்டிலும் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்தன. இதன் பிறகு சடன் டெத் தொடங்கியது. இதன்படி ஒரு வாய்ப்பைத் தவறவிட்டாலும் எதிரணி அதில் கோல் அடித்துவிட்டாலும் வெற்றி எதிரணி வசமாகிவிடும்.
சடன் டெத்தில் நியூசிலாந்து அணிக்கு முதல் வாய்ப்பு கிடைத்தாலும் கோல் அடிக்க முடியாமல் போனது. இந்தியாவும் முதல் வாய்ப்பை தவறவிட்டது.
இதில் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக கிருஷ்ணா பதக் களமிறங்கினார். இது மோசமான விளைவுகளைக் கொடுத்தது.
நியூசிலாந்தும் இந்தியாவும் அடுத்த இரண்டு வாய்ப்புகளை கோலாக மாற்றின. அதன் பிறகு இரு அணிகளும் வாய்ப்புகளை தவறவிட்டன.
இறுதியாக, நியூசிலாந்து அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. ஆனால் இந்தியா தனது வாய்ப்பைத் தவறவிட்டது. இதுவே போட்டியின் முடிவைத் தீர்மானித்தது. இதன் மூலம் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியது.
இனி நடக்கும் காலிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.