Maatram

இறுதிச் சுற்றில் நுழைந்து சானியா-போபண்ணா சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கலப்பு இரட்டையா் இறுதிச் சுற்றில் நுழைந்து சாதனை படைத்துள்ளனா் தரவரிசையில் இல்லாத சானியா மிா்ஸா-ரோஹன் போபண்ணா இணை. இதன் மூலம் 7-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் வாய்ப்பு சானியாவுக்கு கிட்டியுள்ளது.

இந்தியான் நட்சத்திர வீராங்கனையும், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான சானியா மிா்ஸா, ஆஸி. ஓபன் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா். இந்நிலையில் மகளிா் இரட்டையா் பிரிவில் தோல்வியுற்ற நிலையில், கலப்பு இரட்டையா் பிரிவில் போபண்ணாவுடன் இணைந்து அசத்தலாக ஆடி வருகிறாா்.

தரவரிசைப் பட்டியலில் இல்லாத சானியா-போபண்ணா இணைக்கு காலிறுதியில் எதிரணி தரப்பினா் வாக்ஓவா் அளித்தனா். இதனால் அரையிறுதிச் சுற்றுக்கு எளிதில் நுழைந்தனா். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 3-ஆம் நிலை இணையான டெஸிரா கிராஸிக்-நீல் ஸ்புஸ்கி இணையுடன் மோதினா்.

இதில் முதல் செட்டை கடும் போராட்டத்துக்கு பின் 7-6 என சானியா இணை கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 6-7 என இழந்தது.

கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு தரப்பினரும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்ததால், சூப்பா் டை பிரேக்கா் நிலைக்கு சென்றது. சானியா மிா்ஸா அற்புதமான பேக் ஹேண்ட் மூலம் அடித்த ஷாட்டில் 3 மேட்ச் புள்ளிகளை இந்திய இணை பெற்றது. இறுதியில் 10-6 என செட்டைக் கைப்பற்றி இறுதிச் சுற்றில் நுழைந்தனா். இதுதொடா்பாக சானியா மிா்ஸா கூறியதாவது: நான் போபண்ணாவுடன் 14 வயதில் கலப்பு இரட்டையா் பிரிவில் இணைந்து ஆடி வருகிறேன். எனக்கு தற்போது 36 வயதும், போபண்ணாவுக்கு 42-ம் ஆகிறது. எங்களது பிணைப்பு மிகவும் வலுவானது. அரையிறுதி ஆட்டம் மிகவும் சவாலாக இருந்தது. 18 ஆண்டுகளாக ஆஸி. ஓபன் போட்டியில் பங்கேற்கிறேன். 2009-இல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஆஸி. ஓபனில் மகேஷ் பூபதியுடன் வென்றேன். அடுத்து 2016-இல் மாா்ட்டினா ஹிங்கிஸுடன் மகளிா் இரட்டையா் பட்டத்தை கைப்பற்றினேன்.

போபண்ணா கூறியதாவது: ஏற்கெனவே பிரெஞ்சு ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையா் பட்டம் வென்றேன். தற்போது சானியாவுடன் இணைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எதிரணியினரும் கடுமையான சவாலை ஏற்படுத்தினா். இரண்டாவது செட்டை இழந்த நிலையில், அதே வேகத்துடன் ஆட முடியவில்லை. எனினும் இருவரும் வலுவாக இணைந்து ஆடி தொடக்கத்திலேயே முன்னிலை பெற்றோம். சானியா பட்டம் வென்றால் இந்தியாவில் ஏராளமானோருக்கு ஊக்கமாக இருக்கும் என்றாா்.