வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுருப்பதாக தெரியவந்துள்ளது.
புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரை வைத்து இந்த சதித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். பேரணியில் வருகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டங்கள் மேட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கு பேரணியை தடுக்கும் வகையிலேயே குறித்த சதித்திட்டம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று வந்தாறுமூலையில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மற்றும் அங்குள்ள ஒருசில தமிழ் மாணவர்களை வைத்தும் இந்த பேரணியை முறியடிக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில் நாளை நான்காவது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ள வடக்கு கிழக்கு மக்கள் எழுச்சி பேரணியை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் முறியடிப்பதாக போலியான தோற்றப்பாட்டை உருவாக்கவே குறித்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள், மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை நிறைவு நிகழ்வு நடாத்துவதற்கு விளையாட்டரங்கு ஒன்றை தெரிவு செய்து ஏற்பாட்டாளர்கள் மட்டு மாநகரசபையில் அனுமதி கோரிய போதும் அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் பிரதி முதல்வருக்கு உத்தியோகபூர்வமாக பொறுப்பை ஒப்படைக்காததால் பிரதி முதல்வர் குறித்த விடயத்தில் கைவிரித்துள்ளதாக தெரியவருகிறது.