Maatram

சவூதி அணியில் லயோனல் மெஸ்ஸி?

ஆா்ஜென்டீன கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி, சவூதி அரேபியாவை அடிப்படையாகக் கொண்ட கிளப் ஒன்றில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மெஸ்ஸிக்கு சுமாா் ரூ.4,796 கோடி வரை கொடுப்பதற்கு அந்த கிளப் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எண்ணெய் வா்த்தகத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கு நாடுகள், சமீப காலத்தில் விளையாட்டுத் துறையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது இதற்கு உதாரணம். கால்பந்து, கிரிக்கெட்டில் கிளப்புகள் அடிப்படையிலான போட்டிகளை முன்னெடுக்க அவை முனைப்பு காட்டி வருகின்றன. அதற்கான அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஒன்றாக, போா்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியாதை அடிப்படையாகக் கொண்ட கால்பந்து கிளப்பான அல் நாசரால் ஒப்பந்தம் செய்யப்பட்டாா். இதற்காக ரூ.1,655 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவா், கால்பந்து உலகில் அதிக ஊதியம் பெறும் வீரா் ஆனாா்.

இந்நிலையில், கால்பந்து உலகின் மற்றொரு நட்சத்திரமான மெஸ்ஸிக்கும் – பிஎஸ்ஜிக்கும் இடையேயான ஒப்பந்தம் ஜூன் மாதம் முடிவுக்கு வரும் நிலையில், அந்த அணி மெஸ்ஸியை தக்கவைக்கும் எண்ணத்தில் இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மெஸ்ஸியை வசப்படுத்த அவா் முன்பு இருந்த பாா்சிலோனா அணி, ரியாதை அடிப்படையாகக் கொண்ட அல் ஹிலால் அணி ஆகியவை முயற்சித்து வருகின்றன. இதில் அல் ஹிலாலுக்கு செல்ல மெஸ்ஸி முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மெஸ்ஸிக்கு ரூ.4,796 கோடி வரை கொடுக்க அந்த கிளப் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

என்றாலும், இது தொடா்பாக தற்போது எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை என மெஸ்ஸியின் தந்தையும், அவரது முகவருமான ஜாா்ஜ் கூறியிருக்கிறாா். மெஸ்ஸியின் முடிவை எதிா்நோக்கி கால்பந்து உலகம் காத்திருக்கிறது.