Maatram

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்

இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் நடத்தும் பேச்சுக்கள் சற்று முக்கியத்துவம் பெறுகின்றன.

ரணில் விக்ரமசிங்க தனது லண்டன் சந்திப்புகள் மற்றும் பயணத்திற்கு பின்னர் நகர்த்தும் ஒரு முக்கியமான சந்திப்பு இதுவாகும்.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை வடக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் நடத்த திட்டமிட்டுள்ள சந்திப்புக்கு முன்னோடியாக இந்த நகர்வு இடம் பெறுவதாகவும் கருதப்படுகின்றது.

இதற்கிடையே, நேற்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடிதத் தலைப்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு செய்தி குறிப்பும் முக்கியமான உற்று நோக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தச் செய்திக் குறிப்பில் தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆக்கப்பூர்வமாக தாம் அரசாங்கத்தோடு பேசி ஒரு முடிவை எடுக்க தயார் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அத்துடன், வடக்கும் கிழக்கும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் சரித்திர பூர்வமான வாழ்விடங்கள் என்ற அடிப்படை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் வடக்கு கிழக்கு ஒரே அலகாகக் கொண்டு, இந்த அடிப்படையில் தான் பேச்சுக்கள் இடம்பெற வேண்டும். இதற்கு மாறான எந்தப் பேச்சுக்களிலும் ஈடுபட தாம் தயார் இல்லை என்ற கராறான ஒரு நிலைப்பாடும் அனுப்பப்பட்டிருக்கின்றது.

கடந்த வாரம் இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்ற நிலையில், பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு என்ற விடயம் 1987 இல் கைசாத்திடப்பட்ட இந்தோ – சிறிலங்கா ஒப்பந்தத்தில் முக்கியமாக உள்ளதான கருத்தியலுடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட வடக்கு கிழக்கு என்ற விடயம் தமிழ் தேசிய அரசியல் பிரதிநிதிகளால் அடிக்கடி வலியுறுத்தப்பட்டு வந்தாலும், கோபால் பாக்லேவுக்கும் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இந்த விடயம் கூட்டமைப்பால் முன்னகத்தப்படுவது, இது இந்தியாவால் தற்போது முன் நகர்த்தப்படும் ஒரு விடயமாக மாற்றப்படுகிறதா என்ற ஊகங்களை எழுப்பியுள்ளது.

அடுத்த வருடம் இதே காலப்பகுதியில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதனால் தமிழகத்தில் தனக்குரிய தேர்தல் அறுவடைக்காக பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்த முனையும் விடயங்களில் ஒன்றாக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தை மையப்படுத்தி இந்தியா இவ்வாறான நகர்வை மேற்கொள்வதான ஐயங்களும் உள்ளன.