Maatram

இம்ரான்கானின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை நீடிப்பு

                    அரச இரகசியங்களை பகிரங்கபடுத்தியமை தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் விளக்கமறியலை இரண்டு வாரங்களுக்கு நீடித்து அந்த நாட்டு விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமது பதவிக் காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்றதாக இம்ரான் கான் முன்னதாக கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு 3 வருட சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் வைக்கப்பட்டார்.
இந்தநிலையில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து இஸ்லாம்பாத் மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அத்துடன், அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அந்த நீதிமன்றம் உத்தரவொன்றையும் பிறப்பித்தது.

எனினும், அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் அனுப்பிய இரகசிய தகவலின் உள்ளடக்கங்களை பகிரங்கப்படுத்தி, அதை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தியதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். குறித்த வழக்கில் இம்ரான்கானின் விளக்கமறியலை எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.