Maatram

அமெரிக்க தூதுவருக்கு இலங்கையில் புதிய சிக்கல்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கு எதிராக தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பால் இன்று வெளிவிவகார அமைச்சில் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியே இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இந்த நாட்டின் அமெரிக்க தூதுவர், எமது உள்நாட்டு விவகாரங்களில் பாரிய அளவில் தலையீடு செய்கின்றார். அதேபோன்று இந்த நாட்டின் அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில், அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்கவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்கத் தூதுவர் இந்த நாட்டின் கடற்படை தளபதி உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளை சந்தித்து, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்றார்.

இதனை தெளிவாக எடுத்துக்கொண்டால், தூதுவர் என்ற வகையில் அவருக்குரிய சலுகைகள் மற்றும் அதிகாரங்களை தாண்டி, வியட்னா உடன்படிக்கையை மீறியே அவர் செயற்படுகின்றார்.

இவ்வாறான சூழ்நிலைகளின் போது செய்ய வேண்டியது ஒன்றுதான், வெளிவிகார அமைச்சருக்கு பொறுப்பொன்று உள்ளது. உடனடியாக இந்தத் தூதுவரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்க வேண்டும். அவரது வரம்புகளை மீறிச் செயற்படுகின்றமை தொடர்பாக எச்சரிக்க வேண்டும்.

அவர் காலணித்துவ நாட்டின் செயலாளர் போன்று செயற்படுகின்றார். இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்ற வகையில், எமது நாட்டு மக்களை நிந்திக்கும் செயற்பாடு.

இந்தியாவின் உயர்ஸ்தானிகர், காணொளி ஊடான சந்திப்பில் உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறும் உடனடியாக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கோருகின்றார்.

எந்த நாட்டில் எந்த உலகத்தில் அவ்வாறு நடைபெறுகின்றது. அனைத்து நெறிமுறைகளும் மீறப்படுகின்ற நிலையில், ஒரு வார்த்தை கூடப் பேசப்படுவதில்லை” – என்றனர்.