ஜஸ்டின் ட்ரூடோ 2015இல் முதல்முறையாக கனடாவின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர் இந்தியாவில் மோடீ அரசில் இருப்பவர்களைவிட தனது அமைச்சரவையில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று நகைச்சுவையாகக் கூறினார்.
அப்போது ட்ரூடோ நான்கு சீக்கியர்களை அமைச்சரவையில் சேர்த்திருந்தார். கனடாவின் அரசியல் வரலாற்றில் இப்படி நடந்தது அதுவே முதல்முறை.
தற்போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு இந்தியாவுடனான கனடாவின் உறவுகள் கடுமையான சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப் பின்னால் இந்திய அரசு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ திங்களன்று நாடாளுமன்றத்தில் சந்தேகம் தெரிவித்தார். அதன் பிறகு இரு நாடுகளும்இ ஒன்று மற்றதன் உயர் தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றின.
காலிஸ்தான் காரணமாக கனடாவுடனான இந்தியாவின் உறவுகளில் கடந்த காலங்களிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் பதற்றங்கள் பற்றிக் குறிப்பிடப்படும் அளவுக்கு அது ஒருபோதும் தீவிரம் அடைந்ததில்லை.
கனடாவில் சீக்கியர்கள் மத்தியில் ட்ரூடோவின் பிரபலம் பற்றிப் பேசப்படும் போதெல்லாம்இ காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீதான அவரது மென்மையான நிலைப்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடாவிடம் இந்திய அரசு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.
ட்ரூடோ அரசு தனது வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்து காலிஸ்தான் மீது மென்மையாக இருப்பதாக இந்தியா கருதுகிறது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இந்தக் கூற்றை முன்வைத்துள்ளார்.