ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, “அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு” பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன
செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த மார்லின் லுவாண்டா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி கிளர்ச்சிக்குழு.
தற்போது பிரான்ஸ் , இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் அந்த கப்பலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.
தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததையடுத்து, இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்கு அனுப்பப்பட்டதாக இந்திய கடற்படை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் 22 இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் இருக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக விரைந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் குழுவின் முயற்சியால் கப்பலில் பற்றியிருந்த தீ அணைக்கப்பட்டு விட்டதாக இந்திய கடற்படை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உறுதியாகவும், ஈடுபாட்டோடும் இந்திய கடற்படை தொடர்ந்து செயல்படும் என்றும், கடல் பரப்பில் உயிர்களை காப்பதற்கான உறுதியை கொண்டுள்ளதாகவும் இந்திய கடற்படை தனது பதிவில் தெரிவித்துள்ளது.