Maatram

விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சு

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் ஹரியாணா – பஞ்சாப் மாநில எல்லையில் ஷாம்பு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து முன்னேறக் கூடாது என்பதற்காக இரண்டாவது நாளாக இன்று கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடுப்புகளை மீறி ஹரியாணா எல்லையை கடக்க விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

காலை 11 மணி முதல் விட்டுவிட்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. கண்ணீர் புகைக் குண்டுகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஈரமான சாக்குப்பைகளை கைகளில் வைத்திருக்கின்றனர் விவசாயிகள்.

இந்த பேரணியில் பங்கேற்பவர்கள் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநில விவசாயிகள். அவர்கள், பஞ்சாப் – ஹரியாணா மாநில எல்லைப் பகுதியை செவ்வாய்கிழமை மதியம் வந்தடைந்தனர். அப்போதே அவர்கள் கலைந்து செல்வதற்காக ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஆங்காங்கே நாள் முழுவதும் நீடித்து வந்த மோதல் இரவானதும் தற்காலிகமாக ஓய்ந்தது. விவசாயிகள் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் முகாமிட்டு, நாளைய தினத்திற்காக தயாராவார்கள் என்று விவசாயத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியிருந்தார். இரவில் போராட்டத்தை நிறுத்திக் கொண்டு முகாமிட்ட விவசாயிகள் இன்று மீண்டும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர்.