Maatram

ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளர் அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.

கடந்த ஒரு தசாப்தமாக ரஷ்ய அதிபர் புத்தினின் தீவிர எதிர்ப்பாளராக செயல்பட்ட 47 வயதான அலெக்ஸி நவால்னி; பூமியின் குளிர் மிக்க வட துருவப் பகுதியில் அமைந்துள்ள ஆர்டிக் தண்டனை காலனி சிறையில் மரணம் அடைந்துள்ளதாக டாஸ் செய்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

அலக்ஸே நவால்னி ரஷ்ய அதிபர் புதினின் தீவிர விமர்சகராகப் பார்க்கப்படுகிறார்.

ரஷ்ய அதிகார மையத்தின் ஊழல்களைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் அம்பலப்படுத்தி வருகிறார். இவரது விசாரணை வீடியோக்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

மக்களை ஈர்க்கும் பிரசாரகராக பார்க்கப்பட்ட இவர், 2018ஆம் ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். அதற்காக பிராந்திய அளவிலான பிரசார அலுவலகங்களையும்கூட அமைத்தார். ஆனால், இறுதியில் அவரே வாக்களிப்பதில் இருந்து தடை விதிக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு இவர் நரம்பு மண்டலங்களைப் பாதிக்கும் விஷ அமிலம் செலுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானார். இதற்கு ஜெர்மனியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர், அச்சுறுத்தல்களைத் தாண்டியும் 2021ஆம் ஆண்டு ஜனவரியில் மீண்டும் ரஷ்யாவுக்குள் நுழைந்தார்.

ரஷ்யா வந்து இறங்கிய உடனே அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, அவர் தனது மனைவி யூலியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாஸ்கோவில் வசித்து வந்தார்.

நவால்னியின் “துயர்மிகு மரணத்திற்கு” ரஷ்ய ஆட்சியே “முழுப் பொறுப்பு” ஏற்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கருதுவதாக அதன் தலைவர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தாருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், “போராளிகள் இறக்கலாம், ஆனால், சுதந்திரத்திற்கான போராட்டம் ஒருபோதும் முடிவுக்கு வராது,” என்றும் கூறியுள்ளார்.