இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி முறையே 445 ரன்கள் மற்றும் 430 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி 430 ரன்களில் டிக்ளேர் செய்ய இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மார்க் வுட் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இதன்மூலம், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.