ரஷ்ய – யுக்ரைன் போரின் ஒரு பகுதியாக நான்கு மாதங்களாக அவ்திவ்கா பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது யுக்ரேன் படை.
“மக்களின் உயிரை காப்பாற்றவும், சுற்றி வளைக்கப்படுவதை தவிர்க்கவும், அவ்திவ்காவிலிருந்து எனது படைகளை பின்வாங்குகிறேன்” என்று அறிவித்துள்ளார் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி.
இந்த மாதம் யுக்ரேன் ராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெனரல் ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி “ மக்களின் உயிரை பணயம் வைப்பதற்கு பதிலாக நான் பின்வாங்குவேன்” என்று கூறியிருந்தார். அதைத்தான் கிழக்கு யுக்ரேனிலும் அவர் பின்பற்றினார்.
இந்த போரில் ரஷ்யாவும் அதிக இழப்புகளை சந்தித்துள்ள போதிலும், நான்கு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் போரால் யுக்ரேனிய வீரர்கள், ஆயுதம் மற்றும் வெடிமருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு யுக்ரேனின் எதிர் தாக்குதல் தோல்விக்கு பிறகு, இந்த போரில் ரஷ்யாவுக்கு கிடைத்துள்ள பெரிய வெற்றி இது.
அவ்திவ்கா 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால் யுக்ரைன் அதை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது.
எனவே, இந்த நீண்ட மோதலில் அவ்திவ்காவின் வீழ்ச்சி எதை உணர்த்துகிறது?