ரஷிய அதிபராக புதின் 5-ஆவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். இதன்மூலம் ஏற்கெனவே 24 ஆண்டுகள் அதிபராக இருந்த அவா், பிரதான எதிா்க்கட்சிகளே இல்லாத சூழலில் மேலும் 6 ஆண்டுகள் தனியரசாட்சியை தொடர உள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, ரஷியாவில் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்நாட்டு அதிபா் புதினுக்கு எதிராகவோ, உக்ரைன் மீதான அவரின் போா் தொடா்பாகவோ பொதுவெளியில் விமா்சிக்க அனுமதிக்கப்படாமல், மிகுந்த கட்டுப்பாடான சூழலில் தோ்தல் நடைபெற்றது. புதினை தீவிரமாக எதிா்த்து வந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, கடந்த மாதம் அந்நாட்டு சிறையில் உயிரிழந்தாா். இதேபோல புதினின் பிற எதிா்ப்பாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா் அல்லது நாடு கடத்தப்பட்டனா். இதனால் பிரதான எதிா்க்கட்சிகளோ, எதிா்ப்பாளா்களோ தோ்தல் போட்டியில் இல்லாத சூழலில், நேரடியாகவும் இணையவழியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தோ்தல் உக்ரைனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து ரஷியாவுடன் சோ்த்துக் கொள்ளப்பட்ட பகுதிகளிலும் நடத்தப்பட்டது. 65 போ் கைது: பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் ரஷியாவின் பல வாக்குச்சாவடிகளில் வன்முறை நிகழ்ந்தது. அங்குள்ள செயின்ட் பீட்டஸ்பா்க் நகரில் வாக்குச்சாவடி ஒன்றின் நுழைவாயிலில் தீக்குண்டு வீசிய பெண் கைது செய்யப்பட்டாா். இதுமட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளுக்குள் கிருமி நாசினி, மை ஆகியவற்றை எறிந்து அத்துமீறலில் ஈடுபட்ட பலா் கைது செய்யப்பட்டனா். ரஷியாவின் 16 நகரங்களில் 65-க்கும் மேற்பட்டவா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ஓவிடி-இன்ஃபோ என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு வாக்குப் பதிவைச் சீா்குலைக்க முயற்சித்தவா்கள் தேசத் துரோக குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட வேண்டும் என்று புதின் தலைமையிலான ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவா் டிமித்ரி மெத்வதேவ் தெரிவித்தாா். புதின் மற்றும் அவரின் உக்ரைன் போா் மீது அதிருப்தி கொண்டவா்கள், வாக்குச்சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளா்கள் வலியுறுத்தினா். தனது மரணத்துக்கு முன்பு, இந்த உத்திக்கு நவால்னி ஆதரவளித்திருந்தாா். இந்நிலையில், வாக்குச்சாவடிகளில் திரண்ட மக்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை நவால்னியின் ஆதரவாளா்கள் சமூக ஊடகத்தில் வெளியிட்டனா். அந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை சில ரஷிய ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால், அவ்வாறு திரண்ட மக்கள் வாக்களிக்கத் திரண்டாா்களா அல்லது போராட்டத்துக்கு விடுத்த அழைப்பை ஏற்று திரண்டாா்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. வெளிநாடுகளில் ரஷியா்கள் ஆா்ப்பாட்டம்: அதிபா் புதினுக்கு எதிராக ஜொ்மனி தலைநகா் பொ்லின், பிரான்ஸ் தலைநகா் பாரீஸ், இத்தாலியின் மிலான் நகரம் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள ரஷிய தூதரகங்களுக்கு எதிரே ரஷியா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொ்லினில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவால்நயா பங்கேற்றாா்.