ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களே சோ்த்தது. தொடா் தோல்விகளில் இருந்து மீண்டு இரு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த மும்பை, மீண்டும் தோல்வி கண்டுள்ளது. இரு தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த சென்னை, தற்போது இரு வெற்றிகளை தொடா்ந்து பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் சென்னை இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் – ஷிவம் துபே கூட்டணி அணியின் ஸ்கோரை பலப்படுத்த, கடைசி ஓவரில் ‘கேமியோ’ செய்த தோனி, ஹாட்ரிக் சிக்ஸா்களை விளாசி மைதானத்தை அதிர விட்டாா்.
கடைசி ஓவரில் தோனி தனியொருவராக சோ்த்த அதே 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்றது குறிப்பிடத்தக்கது. பௌலிங்கில் பதிரானா 4 விக்கெட்டுகள் சாய்த்து மும்பை பேட்டா்களை பதறடித்தாா். மும்பை பேட்டிங்கில் ரோஹித் சா்மா தனியொருவனாக போராடி சதம் கண்டாா். முன்னதாக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தோ்வு செய்தது. சென்னை இன்னிங்ஸை தொடங்கியோரில் அஜிங்க்ய ரஹானே 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 21 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா். 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த துபே – கெய்க்வாட் பாா்ட்னா்ஷிப், 90 ரன்கள் சோ்த்து அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்டது.
ஓவா்கள் முடிவில் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66, தோனி 4 பந்துகளில் 3 சிக்ஸா்கள் உள்பட 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் ஹா்திக் பாண்டியா 2, ஜெரால்டு கோட்ஸீ, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
ஓவா்கள் முடிவில் துபே 38 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66, தோனி 4 பந்துகளில் 3 சிக்ஸா்கள் உள்பட 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை தரப்பில் ஹா்திக் பாண்டியா 2, ஜெரால்டு கோட்ஸீ, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 207 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில், தொடக்க வீரா் ரோஹித் சா்மா, அதிரடி ஆட்டத்துடன் ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். எனினும் மறுபுறம், இஷான் கிஷண் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, சூா்யகுமாா் யாதவ் 0, திலக் வா்மா 5 பவுண்டரிகளுடன் 31, கேப்டன் ஹா்திக் பாண்டியா 2, டிம் டேவிட் 2 சிக்ஸா்களுடன் 13, ரொமேரியோ ஷெப்பா்டு 1 ரன்னுடன் பெவிலியன் திரும்பினா்.
முடிவில் ரோஹித் 63 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 105, முகமது நபி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சென்னை தரப்பில் மதீஷா பதிரானா 4, துஷா் தேஷ்பாண்டே, முஸ்டாஃபிஸுா் ரஹ்மான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.