இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால், கடந்த முறை போல் மெஜாரிட்டிக்கும் கூடுதலான இடங்கள் கிடைக்காது. இந்த முறை 275 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மட்டுமே, தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், மோடி தான் பிரதமர் என்று உறுதியாக கூற முடியாது. பா.ஜ., – எம்.பி.,க்கள் ஒன்றாக கூடி, பெரும்பான்மையாக யாரை தேர்ந்தெடுக்கின்றனரோ, அவர் தான் பிரதமராக முடியும்.
வளர்ச்சி இல்லை
பிரதமர் மோடியைத் தவிர்த்தும் பல பேர் தகுதி திறமையுடன் உள்ளனர். அவர்கள் யார் என்பதை, இப்போது கூற முடியாது. நான்எம்.பி., ஆக கூட இல்லை. என்னை பிரதமர் ஆக்க விருப்பப்பட்டால், மறுப்பு தெரிவிக்க மாட்டேன். அதே நேரத்தில், எனக்கு பிரதமர் பதவி தாருங்கள் என்று, கேட்கவும் மாட்டேன்.
மோடி இரண்டு முறை பிரதமராக இருந்திருக்கிறார். ஆனால், என்னை அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை. மோடியிடம் நிதி அமைச்சராக இருப்பதும் கஷ்டம்.
மோடி கூறுவதற்கெல்லாம் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் தான் தலையசைப்பதோடு, கேட்ட இடங்களில் கையெழுத்தும் போட்டுக் கொடுப்பர். அதற்கு நான் உடன்பட மாட்டேன். இது மோடிக்குத் தெரியும் என்பதால், எனக்கு நிதி அமைச்சர் பொறுப்பு அளிக்கப்படவில்லை.
மோடி தலைமையிலான பத்தாண்டு கால பா.ஜ., ஆட்சியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. நம் நாட்டின் எல்லை பகுதியில் 4,000 சதுர கி.மீ., அளவுக்கு சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால், மோடி அரசு அதை முழுமையாக மறைத்துள்ளது.
எல்லா நாடுகளும் மோடியை போற்றி, புகழ்வது போல ஒரு பிம்பத்தை கட்டமைத்துள்ளனர். ஆனால், வெளிநாடுகளோடு இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை. அமெரிக்காவும்கூட இப்போது நமக்கு எதிர்ப்பாக மாறி உள்ளது.
ஏற்கனவே மோடிக்கு இரண்டு முறை, பிரதமர் வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. இனிமேல் வேறு யாருக்காவது வாய்ப்பளிக்க வேண்டும்.
பிரசாரத்தில் மோடி என்ன பேசுகிறார் என்பதை மக்கள் பார்க்கக் கூடாது. பா.ஜ., தேர்தல் அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அவர் பேசுவது எனக்கே புரியவில்லை. அப்படி இருக்கும்போது மக்களுக்குஎப்படி புரியும்?
ஜாதி வேற்றுமை பார்க்கக்கூடாது. எந்த ஜாதி, எந்த ஊர் என்று வேறுபாடு பார்க்காமல், ஹிந்து என்றால் அனைவரும் ஒன்று என்ற ஒற்றுமை வர வேண்டும்.
விரட்ட வேண்டும்
அதை போல் பொருளாதார முன்னேற்றத்தில், நாட்டு மக்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். அதில் அரசு தலையீடு இருக்கக் கூடாது. நாம் சொந்த காலில் நின்று, சீனாவை தோற்கடிக்க வேண்டும். நம் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்த சீனாவை, திருப்பி விரட்ட வேண்டும். இதுதான் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது; அதைத் தான் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு ஒரே வழி, கடல் நீரை குடிநீராகவும், விவசாயத்துக்கும் பயன்படுத்துவது தான். அது குறித்து தி.மு.க., அரசு பேச மறுக்கிறது. காவிரி தண்ணீர் என்று கூறி ஏமாற்றுகிறது. இங்கு தண்ணீர் தட்டுப்பாடு என்றதும், உடனே, டேங்கர் லாரி தண்ணீரை நோக்கிச் செல்கின்றனர். பணம் பார்க்கவே, இதை தமிழகத்தில் ஆளும்கட்சியினர் செய்கின்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ராகுல், மகளிருக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது, அவரின் மக்குத்தனத்தின் வெளிப்பாடு. கல்லுாரியில் ‘பாஸ்’ பண்ணாதவர் அவர்.
இந்தியாவில் திறமையான ஒரு அரசியல் தலைவர் யார் என்றால், மம்தா பானர்ஜி தான். திறமை உடையவர்; தைரியம் உடையவர்; நிர்வாக திறன் உடையவர்; கல்வி அறிவு உடையவர்; சிறந்த நிர்வாகி. அவரைப் போன்றவர்களுக்குத்தான் உயர்ந்த பொறுப்புகள் சென்று சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.