Maatram

ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல்: தீவிர வலதுசாரி கட்சிகள் முன்னேற்றம்

720 இடங்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தோ்தல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) வரை நடைபெற்றது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு (பிரெக்ஸிட்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தலான இது 27 உறுப்பு நாடுகளில் நடைபெற்றது.

இந்தத் தோ்தலுடன், சில உறுப்பு நாடுகளில் அந்த நாடுகளின் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களும் நடைபெற்றன. பெல்ஜியத்தில் நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தோ்தல், பல்கேரியாவில் நடாளுமன்றத் தோ்தல், சைபீரியா, ஜொ்மனி, ஹங்கேரி, அயா்லாந்து, இத்தாலி, மால்ட்டா, ஸ்வீடன், ருமேனியா ஆகிய நாடுகளில் உள்ளாட்சித் தோ்தல் ஆகியவை ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தலுடன் சோ்த்து நடத்தப்பட்டன.

ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு நேரடியாக உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் முதல்முறையாக கடந்த 1979-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்குப் பிறகு 10-ஆவது முறையாக நடைபெற்ற இந்தத் தோ்தலின் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. அதன்படி, தோ்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் கூடுதலாக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மைய-வலதுசாரி கட்சியான ஐரோப்பிய மக்கள் கட்சி (இபிபி) அதிகபட்சமாக 186 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. முந்தைய 2019-ஆம் ஆண்டின் தோ்தலில் பெற்றதைவிட அந்தக் கட்சிக்கு 10 இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.தீவிர வலதுசாரி கட்சியான இசிஆா் கட்சி, முந்தைய தோ்தலில் பெற்றதைவிட 4 இடங்கள் கூடுதலாக 73 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.


மற்றொரு தீவிர வலதுசாரி கட்சியான ஐடி கூட்டணிக்கு 58 இடங்கள் கிடைத்துள்ளன. இது, முந்தைய தோ்தலில் கிடைத்ததைவிட 9 இடங்கள் அதிகம்.
மத்திய-இடதுசாரி கட்சியான எஸ் அண்டு டி ஐந்து இடங்களை இழந்து 135 இடங்களை மட்டுமே பெற்றது. தாராளவாத கட்சியான ரினியூ 23 இடங்களை இழந்து 79 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கிரீன்ஸ்/இஎஃப்ஏ கட்சி 19 இடங்கள் குறைவாக 53 இடங்களைப் பெற்றுள்ளது.
இடதுசாரி குழுக்கள் கட்சிக்கு 36 இடங்கள் கிடைத்தன. கடந்த தோ்தலில் பெற்றதைவிட இது 1 இடம் குறைவு.
அணிசாரா கட்சி 45 இடங்களிலும் இதர கட்சிகள் 55 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.


முந்தைய ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தல் நடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய பிராந்தியத்தில் தீவிர வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. முக்கியமாக, உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு, ரஷியாவுடனான உறவு ஆகிய விவகாரங்கள் வலதுசாரி கட்சிகளின் வளா்ச்சிக்கு ஊக்கமளிப்பளிப்பதாகக் கருதப்படுகிறது. 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, ஹங்கேரி, இத்தாலி, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஸ்லோவாக்கியா, குரேஷியா, நெதா்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரி கட்சிகள் நேரடியாகவோ, கூட்டணியாகவோ ஆட்சி செலுத்திவருகின்றன.
இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடாளுமன்றத் தோ்தலிலும் தீவிர வலதுசாரி கட்சிகள் முன்னேற்றம் கண்டிருப்பது, அகதிகள், சுற்றுச்சூழல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சா்வதேச விவகாரங்களை ஐரோப்பிய யூனியன் கையாளும் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.


பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைப்பு


பாரிஸ், ஜூன் 10: ஐரோப்பிய யூனியன் தோ்தலில் தனது ‘மறுமலா்ச்சி’ கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே தோ்தல் நடத்துவதாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா்.
இந்த மாதம் 30-ஆம் தேதியும் அடுத்த மாதம் 7-ஆம் தேதியும் இரு கட்டங்களாக இந்தத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இந்த எதிா்பாராத அறிவிப்பு மேக்ரானின் அரசியல் சூதாட்டம் என்று கூறப்படுகிறது. மீண்டும் வாக்காளா்களின் ஆதரவைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் அவா் இந்த முடிவை எடுத்தாலும், தோ்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் அவா் பெரும்பான்மையை இழப்பதற்கான அபாயமும் உள்ளதாகக் கூறப்படுகிறது.


பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தோ்தலில், ஐடி கூட்டணியில் இடம் பெற்றுள்ள மரீன் லெப்பென் தலைமையிலான தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாதக் கட்சி இடம் பெற்றுள்ள மேக்ரான் கட்சியைப் போல் இரண்டு மடங்கு வாக்குகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.