இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்லப்பட்டது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது.
இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை நாம் இங்கு பார்ப்போம்.
ஹிஸ்புல்லா அமைப்பில் தலைவராக ஹசன் நஸ்ரல்லா இருக்கிறார். இவர் ஒரு சாதாரண காய்கறி விற்கும் கூலி தொழிலாளியின் மகனாவார். 1960ல் பிறந்த இவர், பெய்ரூட்டின் கிழக்கு போர்ஜ் ஹம்மூத் பகுதியில் வளர்ந்தார். இவர் வளர்ந்த காலத்தில் லெபனான் உள்நாட்டு போரில் சிக்கியிருந்தது.
போதாத குறைக்கு இஸ்ரேலின் தாக்குதல் வேறு. இதையெல்லாம் பார்த்த நஸ்ரல்லா நாட்டை காக்க, ஆயுதம் ஏந்தி போரட்டம்தான் ஒரே வழி என்று ஷியா இஸ்லாமிய போராளி குழுவில் இணைந்தார்.
இந்த சமயத்தில் பாலஸ்தீன போராளிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, இஸ்ரேல் லெபனானை கைப்பற்றியது. இஸ்ரேல் பிடியை தகர்க்க உறுதியான அமைப்பு தேவை என்று முடிவெடுத்த போராளி குழுக்கள் ஹில்புல்லாவை உருவாக்கினார்கள்.
இந்த அமைப்பில் இணைந்த நஸ்ரல்லா, தனது கூர்மையான அறிவு திறனாலும், தெளிவான திட்டமிடலாலும் இயக்கத்திற்குள் வேகமாக வளர்ந்தார். இவரது 32வது வயதில் நடந்த ஒரு சம்பவம், இவரை ஹிஸ்புல்லாவின் தலைவராக மாற்றியது.
அதாவது கடந்த 1992ல் அப்போதைய ஹிஸ்புல்லா தலைவராக இருந்த அப்பாஸ் அல்-முசாவி, இஸ்ரேலிய ஹெலிகாப்டர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் இந்த அமைப்பின் தலைவராக நஸ்ரல்லா தேர்வானார்.
நஸ்ரல்லா வெறுமென ஆயுத போராட்டத்தை மட்டுமே நம்பி இருக்கவில்லை. ஒரு இயக்கம் ஜீவிப்புடன் இருக்க வேண்டும் எனில் கொள்கை முக்கியம். நாம் யார்? யாருக்கு எதிராக போராடுகிறோம்? ஏன் போராடுகிறோம்? போராடும் முறை என்ன? செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
கடந்த கால அனுபவங்களிலிருந்து என்ன கற்கிறோம்? சர்வதேச சூழல் எப்படி மாறுகிறது? மாறும் சூழலை எப்படி கணித்து, அதை நமக்கு சாதகமாக்கிக்கொள்வது? வெளியுறவு கொள்கை என்ன? எந்த நாடுகள் நம்மை ஆதரிக்கின்றன? உலக ஆதரவை எப்படி பெறுவது? என ஹிஸ்புல்லாவுக்கு என ஒரு பெரும் சித்தாந்த கட்டமைப்பையே நஸ்ரல்லா உருவாக்கியிருந்தார்.
இதன் மூலம் ஹிஸ்புல்லா அரசியல் சக்தியாகவும் வேகமாக வளர்ந்தது.
இன்று லெபனான் அரசாங்கத்தை வழிநடத்தும் முக்கிய இடத்தில் ஹிஸ்புல்லா இருக்கிறது. லெபனான் அரசு ராணுவத்தை விட அதிக ஆயுதங்களை இது வைத்திருக்கிறது.
இந்த அமைப்புதான் ஹமாஸை முழுமையான ஆயுதம் தாங்கிய போராளி குழுவாக உருவாக்கியது. நீ உள்ளே இருந்து தாக்கு, நான் வெளியில் இருந்து தாக்குகிறேன் என இரண்டு அமைப்புகளும் மங்காத்தா கேம் ஆடியதில், இஸ்ரேல் பெரும் அச்சுறுத்தலை சந்தித்தது.
இந்த கேமை முடிவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இப்போது தீவிரமாக இருக்கிறது. இதன் வெளிப்பாடுதான் லெபனான் மீதான தாக்குதல். இது எல்லாவற்றுக்கும் மூளையாக செயல்படுவது நஸ்ரல்லா என்பதை அறிந்துக்கொண்ட இஸ்ரேல், அவரை கொல்ல பல ஆண்டுகளாக முயன்று வருகிறது.
இந்நிலையில் பெய்ரூட் மீது இன்று நடத்திய தாக்குதலில், நஸ்ரல்லா கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால் ஹிஸ்புல்லா இன்னும் இதை உறுதி செய்யவில்லை.