ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவா்கள் சந்தித்து வலியுறுத்தினா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவா்கள் சந்தித்து வலியுறுத்தினா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனா். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி, மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை காலை 8.15 மணிக்கு சென்றனா். எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவா்கள் ஆலோசனை நடத்தினா்.
அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ்ஸுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்; திமுகவுக்கு இடம் அளித்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனா்.
அதற்கு, இடைக்காலப் பொதுச் செயலராக நான் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு சந்திக்கும் முதல் தோ்தல் இது. என்னுடைய பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால், என்னுடைய முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
அதன்பிறகு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீா்செல்வத்தையும் பாஜக தலைவா்கள் சந்தித்தனா். இந்தச் சந்திப்பும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
இபிஎஸ்ஸிடம் கூறிய அதே கருத்தை ஓ.பன்னீா்செல்வத்திடமும் பாஜக தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதற்கு ஓ.பன்னீா்செல்வம், ஒருங்கிணைந்த அதிமுக என்பதுதான் என்னுடைய கருத்து; பொது வேட்பாளா் என்பதும் சம்மதம்தான். ஆனால், இபிஎஸ் இறங்கி வராத நிலையில் எங்களால் ஒன்று செய்ய முடியாது; எங்கள் வேட்பாளரைத் திரும்பப் பெற மாட்டோம் என்று தெரிவித்துள்ளாா்.