Maatram

அதானி விஷயத்தில் மோதியின் மௌனம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மீதான விவாதத்தின் போது, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோதியின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கௌதம் அதானியின் வெற்றிக்கு முக்கிய காரணம், பிரதமர் மோதியிடம் அவருக்கு இருக்கும் நெருக்கம்தான் என்று ராகுல் காந்தி கூறினார். பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பதிவேட்டில் இருந்து ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்காரணமாக ராகுல் காந்தியின் உரை குறித்த முழு விவரங்களையும் இங்கு தர இயலாது.

புதன்கிழமை குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளிக்க நரேந்திர மோதி எழுந்து நின்றபோது, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு மோதி என்ன பதில் சொல்லப்போகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் ஆவலாக இருந்தனர்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் மோதி சுமார் ஒன்றரை மணி நேரம் உரை நிகழ்த்தினார், ஆனால் அவர் தனது முழு உரையிலும் கெளதம் அதானியின் பெயரை எடுக்கவில்லை. அவர் பற்றி சுட்டிக்காட்டக்கூட இல்லை.

அதானி விவகாரத்தில் பிரதமரின் மெளனம் குறித்து அரசியல் தலைவர்கள் முதல் பொது மக்கள் வரை பல்வேறு வகையில் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

“எனக்கு திருப்தி இல்லை. பிரதமரின் அறிக்கையால் உண்மை வெளிப்படுகிறது. (அதானி) நண்பராக இல்லையென்றால், (பிரதமர்) சரி, விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறியிருப்பார். ஆனால் விசாரணை பர்றி அவர் பேசக்கூட இல்லை. பிரதமர் அவரை பாதுகாக்கிறார், முன்னேற உதவுகிறார் என்று இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.”என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்

“சிந்தனையாளர்கள்’ நான்கு கேள்விகளைக் கேட்டார்கள், ‘பிரசாரம் செய்பவரால்’ ஒன்றுக்குக்கூட பதிலளிக்க முடியவில்லை,” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேடா ட்வீட் செய்துள்ளார்.

சிவசேனையின் மாநிலங்களவை எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, “அதானி குழுமத்தின் இந்த ஆண்டுக்கான செய்தி தொடர்பாளர் மற்றும் விற்பனையாளர் விருது மாண்புமிகு பிரதமருக்கு” என ட்வீட் செய்துள்ளார்

இந்த விஷயத்தை அவர் இப்படித்தான் கையாள்வார் என்பது தெரிந்த விஷயம் என்கிறார்கள் மோதியின் அரசியல் எதிரிகள். ஆனால் அவையில் பிரதமர் மோதி அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அதானி குறித்து மெளனம் காத்தது ஏன் என்று மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த செய்தியாளர் விஜய் திரிவேதி இதற்கு இரண்டு காரணங்களை கூறுகிறார்.

தொழில்நுட்ப மற்றும் செயல் உத்தி ஆகிய காரணங்களைக் கருத்தில் கொண்டு விஜய் திரிவேதி இதைப் பார்க்கிறார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது அரசு தனது பணிகளை விரிவாக விளக்குவது வழக்கம் என்று அவர் கூறுகிறார். இதைத்தான் மோதி செய்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் பெரும்பாலான பகுதிகள் மக்களவை சபாநாயகரின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டன.அந்த நிலையில் பிரதமர் அதற்கு எப்படி பதில் அளிப்பார் என்று வினவுகிறார் விஜய் திரிவேதி.

ஆனால் இது ஒரு தொழில்நுட்ப விஷயம் மட்டுமல்ல. இது செயல் உத்தி சார்ந்தது என்றும் குறிப்பிடுகிறார் விஜய் திரிவேதி.

“பிரதமர், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதன் மூலம், அவருக்கு (ராகுல் காந்தி) அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை,” என்கிறார் அவர்.

மக்களவையில் ராகுல் காந்தி பேசும்போது, பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர் யாரும் சபையில் இருக்கவில்லை.

“இது பாஜகவின் உத்தியின் ஒரு பகுதியா இல்லையா என்று சொல்வது கடினம். ஆனால் பாஜக ராகுல் காந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்ற அதன் செய்தி மிகவும் தெளிவாக உள்ளது,” என்று விஜய் திரிவேதி குறிப்பிட்டார். .

மக்களவையில் விவாதத்தின் போது மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி மக்களவை செய்தியாளர் மாடத்தில் இருந்துள்ளார்.

“பிரதமர் இதைப் பற்றி ஏதாவது சொல்வார் என்று அனைவரும் காத்திருந்தனர். ஆனால் பாஜகவும் பிரதமரும் உத்தியின் ஒரு பகுதியாக அதானியிடம் இருந்து முற்றிலும் விலகிவிட்டதாகத் தெரிகிறது,” என்று பிபிசியின் நாள் முழுவதிலுமான போட்காஸ்ட் உரையாடலின் போது அவர் தெரிவித்தார்.

அதானி விவகாரத்தில் பாஜகவும், மோதி அரசும் எதுவும் பேசத்தயங்குவதாக, நீண்ட காலமாக பாஜக செயல்பாட்டை கவனித்து வரும் மூத்த செய்தியாளர் ராதிகா ராமசேஷன் கருதுகிறார்.”செபி அல்லது ரிசர்வ் வங்கி இந்த விஷயத்தில் என்ன செய்யவேண்டுமோ அதை செய்யும். ஆனால் கட்சிக்கோ அரசுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே கட்சியின் நிலைப்பாடு. மோதி தனது உரையில் அதானியை குறிப்பிடாததற்கு இதுவே காரணம்,” என்கிறார் அவர்.