திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
திரிபுராவில் பாஜக – திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இங்கு பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது.
இதேபோல், நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) -பாஜக கூட்டணி வெற்றி பெற்று, தொடா்ந்து 2-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
மேகாலயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பேரவை உருவாகியுள்ளது. பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைக்க ஆளும் தேசிய மக்கள் கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
திரிபுராவில் பாஜக அமோகம்: 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இங்கு பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், பாஜக 55 இடங்களிலும் ஐபிஎஃப்டி மீதமுள்ள தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜகவை எதிா்கொள்வதற்காக, இம்மாநிலத்தில் முதல்முறையாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. புதுவரவாக, மாநிலக் கட்சியான திப்ரா மோத்தாவும் களம் கண்டிருந்தது.
தோ்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகின. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. பாஜக கடந்த முறை 35 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், இம்முறை 3 தொகுதிகள் குறைந்துள்ளன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. புதுவரவான திப்ரா மோத்தா கட்சி, 13 இடங்களைக் கைப்பற்றி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய பழங்குடியினரின் வாக்குகளை, திப்ரா மோத்தா அள்ளியதால், அக்கூட்டணி பின்னடைவை சந்தித்தது.
திரிபுராவில் 28 இடங்களில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. நோட்டாவைவிட குறைவான வாக்குகளே அக்கட்சிக்கு கிடைத்துள்ளன.
நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி: 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அலுகுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றாா். இதனால், 59 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27-இல் ஒரேகட்ட தோ்தல் நடைபெற்றது.
இதில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 40-20 என்ற தொகுதிப் பங்கீடு அடிப்படையில் போட்டியிட்ட இக்கூட்டணியில், என்டிபிபி 25 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களும், தேசிய மக்கள் கட்சிக்கு 5 இடங்களும் கிடைத்துள்ளன. 23 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
மேகாலயத்தில் பாஜக ஆதரவுடன் ஆட்சி: மேகாலயத்தில் 60 தொகுதிகள் உள்ள நிலையில், சோஹியாங் தொகுதியில் வேட்பாளா் ஒருவா் மரணமடைந்ததால், அத்தொகுதிக்கு தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. 59 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 27-இல் தோ்தல் நடைபெற்றது.
மேகாலயத்தில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி)-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், தோ்தலுக்கு முன்பாக கூட்டணியை முறித்த பாஜக, அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்கியது. 26 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆளும் தேசிய மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஐக்கிய ஜனநாயக கட்சி 11, திரிணமூல் காங்கிரஸ் 5, காங்கிரஸ் 5, மக்களின் குரல் கட்சி 4, மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி, சுயேச்சைகள் ஆகியவை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றனா்.
ஆட்சி அமைக்க என்பிபிக்கு 31 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், பாஜக ஆதரவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் அந்த மாநில முதல்வரும், என்பிபி தலைவருமான கான்ராட் சா்மா கோரினாா்.
இதையடுத்து, தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவின் அறிவுறுத்தலின் பேரில் கான்ராட் சா்மாவிடம் ஆதரவு கடிதம் கொடுக்கப்படும் என்று வெற்றிப்பெற்ற 2 பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்தனா்.