Skip to main content

Maatram

அமைச்சுப் பதவிகளுக்குக்கு முட்டி மோதும் பொதுஜன பெரமுன: கட்சிதாவ காத்திருக்கும் ராஜித

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எஞ்சிய பத்து அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் பலர் களத்தில் குதித்துள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் சிலரை உருவியெடுத்து அமைச்சு பதவிவழங்க ரணில் தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, அமைச்சரவை முப்பது உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்களில் இருபது பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில், புதிதாக பத்து அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பத்து அமைச்சுப் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சி.பி.ரத்நாயக்க, ஜனக பண்டார தென்னகோன், விமலவீர திஸாநாயக்க உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ராஜித சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மூலமாக மேலும் சில ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களை உருவியெடுக்க ரணில் தரப்பு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என ராஜித சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், சுகாதார அமைச்சராக இருக்கும் ரம்புக்வெல்ல இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் குடும்பத்துக்கு சொந்தமான ஊடகங்களில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பெருமளவு உறுப்பினர்கள் வெளியேறும் நிலையில் உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. எனினும், நிலைமை அவ்வாறில்லையென ஐக்கிய மக்கள் சக்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.