Maatram

இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையில் ரேடார் தளத்தை அமைக்க சீனா திட்டம்

இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்பகுதியும் உள்ளடங்கிய பகுதியில் இந்திய கடற்படையின் மூலோபாய கண்காணிப்பினை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்மொழியப்பட்ட ரேடார் அமைப்பு, பிராந்தியத்தில் புது டெல்லியின் மூலோபாய நடத்தையை கண்காணிக்கும் அதேவேளையில், இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும் என்று Economic Times தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து தென்கிழக்கே சுமார் 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலங்கையின் தேவேந்திர முனையை அண்மித்த பகுதியில் இந்த திட்டம் நிறுவப்படவுள்ளது.

சீன அறிவியல் அகடமியின் Space Information Research Institute இதற்கு தலைமை தாங்குவதாக வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

தேவேந்திர முனையில் இருந்து தென்மேற்கே 1700 கிமீ தொலைவில் உள்ள டியாகோ கார்சியாவில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் திறன் உத்தேச ரேடாருக்கு இருப்பதாகவும் தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கையின் படி, ரேடார் அமைப்பு சீனாவால் வெற்றிகரமாக நிறுவப்பட்டால், அது முன்மொழியப்பட்ட ரேடார் வரம்பிற்குள் உள்ள இந்திய இராணுவ மையங்களை மோசமாக பாதிக்கும்.

இலங்கையில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சீன கண்காணிப்பு மையம் அதன் கிழக்கில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் எல்லையில் செயற்பட முடியும்.