Maatram

அரசியலில் தந்திரோபாயம் என்பது – விரும்பியது கிடைக்கும் வரையில் கிடைத்ததை விரும்புவதாகும்

தமிழில் ஒரு கூற்றுண்டு. அதாவது, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. தமிழர்களின் அரசியலும் இன்று அப்படியானதொரு நிலையில்தான் இருக்கின்றது. ஆரம்பத்தில் சமஸ்டி, அதிலிருந்து தனிநாடு, பின்னர் மீண்டும் சமஸ்டி. ஆனால் தமிழர் அரசியலின் உண்மையான நிலைமையோ, மாகாண சபையை முழுமையாக பயன்படுத்த முடிந்தாலே, போதுமானதென்னும் நிலையில்தான் இருக்கின்றது. அதாவது, பிச்சை வேண்டாம் நாயை பிடியுங்கள் என்று கூறுவதற்கு ஒப்பானது. ஆனால் இந்த உண்மையை வெளிப்படையாக கூறும் துனிவு பலரிடம் இல்லை. வாக்குகள் பறிபோய்விடுமோ – என்று அச்சப்படும் அரசியல்வாதிகளால், சில விடயங்களை பகிரங்கமாக கூற முடியாமையை விளங்கிக்கொள்ளலாம், ஆனால், கருத்துருவாக்கங்களை செய்யும் அரசியல் சிந்தனையாளர், பத்திரிகையாளர் மற்றும் சமூகமட்டத்தில் மதிக்கப்படும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரும் மதில் மேல் பூனைகளாக இருப்பதுதான் துரதிஸ்வடசமானது. இளைய தலைமுறையை வழிநடத்துவதில் இவர்களுக்கே தலையாய பொறுப்புண்டு. ஆனால் அவர்களோ தொடர்ந்தும் நடைமுறைச் சாத்தியமற்ற கதைகளையே பெருமைப்படுத்த முயற்சிக்கின்றனர்.

ஈழத் தமிழ் தலைமைகளுக்கு போதுமான அரசியல் அனுபமுண்டு. இந்த அனுபவத்திலிருந்து சிந்தித்தாலே போதுமானது. ஆனால் அதற்கு பலரும் தயாராக இல்லை. இலங்கை தமிழரசு கட்சியின் ஆங்கிலப் பெயர் சமஸ்டிக் கட்சி. அதாவது, சமஸ்டியை அடைவதுதான் தமிழரசு கட்சியின் இலக்கு. இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த 74 வருடங்களாக தமிழ் அரசியல் கட்சிகள் சமஸ்டி தொடர்பில் பேசிவருகின்றன. ஆனால் அடைய முடிந்ததா? கடந்த 74 வருடங்களில் ஏராளமான அரசியல் ஆளுமைகளையும், அவர்களின் அரசியல் நகர்வுகளையும் நாம் கண்டிருக்கின்றோம். ஆனாலும் எதனையும் தமிழ் கட்சிகளால் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால், கடந்த 74 வருட கால அரசியல் வரலாற்றில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற மாகாண சபை ஒன்றுதான் நீடித்து நிலைத்திருக்கின்றது.

அன்றைய சூழலில் ஆயுத விடுதலை இயக்கங்களில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஓன்றுதான், மாகாண சபையை பொறுப்பேற்று நடத்திக் கொண்டு, அதிலிருந்து முன்னேற்றலாமென்னும் நிலைப்பாட்டை கொண்டிருந்தது. இந்தியாவின் ஆதரவுடன் அதனை சாத்தியப்படுத்த முடியுமென்று அவர்கள் உறுதியாக நம்பினர். ஆனால் 1989இல், பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, நிலைமைகள் தலைகீழாகின. இந்தியாவை தமிழர் பிரச்சினையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளும் பிரேமதாசவும் உடன்பட்டுக் கொண்டதன் பின்புலத்தில், இந்தியா வெளியேற்றப்பட்டது. இந்தியாவின் வெளியேற்றம் என்பது, அன்றைய சூழலில் யதார்த்தபூர்வமான அணுகுமுறைகள் அனைத்துக்குமான முற்றுப்புள்ளியாகும்.

விடுதலைப் புலிகளின் நம்பிக்கை வேறொன்றாக இருந்தது. அதனை அடைய முடியுமென்று அவர்கள் நம்பினர். விடுதலைப் புலிகள் தாங்கள் நம்பிய ஒன்றுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கினர். அதன் மீது மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஒரு விடயத்திற்காக உயிரை கொடுத்துக் கொண்டிருக்கும் போது, மக்கள் இயல்பாகவே அதன் பக்கமாகத்தான் இருப்பர். உயிரைகொடுப்பதற்கு சித்தமாக இருப்பவர்கள் கூறுவதைத்தான் சரியென்று நம்புவர். அதுதான் அன்றைய சூழலில் இடம்பெற்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு கூறிய உண்மைகளை அன்று செவிமடுக்க எவரும் தயாராக இருக்கவில்லை.

நான் ஒரு முறை வன்னியில் நின்று கொண்டிருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் என்னிடம் இவ்வாறு கூறினார். அதாவது, அண்ணன், நாங்கள் இன்றைக்கும் பலமாக இருக்கின்றோம் என்றால், அதற்கு எங்களுடைய தலைவர்தான் காரணம். அவருடைய முடிவுகள் பிழையென்றால் நாங்கள் அழிந்தல்லவா போயிருப்பம் என்றார் அந்த உறுப்பினர். நான் அதனை சரியென்றே ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் அவர் கூறியது தர்க்கரீதியில் சரியாகத்தான் இருந்தது. ஏனெனில் அன்று விடுதலைப் புலிகள் பலமாக இருந்தனர். ஆனால் அந்த தர்க்கத்தை முன்வைத்து இன்று வாதிட முடியுமா? 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்புலத்தில், அதுவரையான நமது நம்பிக்கைகளும், அரசியல் புரிதல்களும், நிலைப்பாடுகளும் தோற்றுவிட்டன. இந்த பார்வையிலிருந்து சிந்தித்தால், இன்றைய சூழலில் மதில் மேல் பூனையாக இருக்க வேண்டியதில்லை. இன்றைய யதார்த்தங்களை நிமிர்ந்து எதிர்கொள்ள முடியும். ஆனால் பிரச்சினையோ இப்போதும் நம்மில் பலர், விடயங்களை கூனிக்குறுகியே எதிர்கொள்ள முற்படுகின்றனர். அரசியல் யதார்த்தங்களை கண்டு பயந்து நடுங்குகின்றனர். பலருக்கு சுயவிமர்சனம் என்னும் சொல்லை கேட்டவுடனே, கை உதறுகின்றது. நாங்கள் அனைத்திலும் சரியென்றால் பின்னர் எவ்வாறு இவ்வாறனதொரு கோவண நிலை ஏற்பட்டது?

அரசியல் என்பது சூழ்நிலைகளை கையாளும் கலையாகும். சூழ்நிலைகள் நமது விருப்பங்களுக்கு அமைவாக ஓரு போதும் இருக்கப் போவதில்லை. அதே போன்று அனைத்து விடயங்களிலும் நம்மோடு ஒத்துப்போபவர்கள், நமக்கு முன்னால் இருக்கப் போவதில்லை. ஆனால் நாமோ, நமக்கு விரும்பமில்லாத சூழலுடனும், பல சந்தர்பங்களில் நமக்கு விருப்பமில்லாத நபர்களுடனுமே பணியாற்ற வேண்டியிருக்கும். அரசியலில் இந்த நிலைமை எப்போதுமே தவிர்க்க முடியாதது. இதன் காரணமாகத்தான் இந்தக் கட்டுரையாளர், எப்போதும் தந்திரங்களை முதன்மைப்படுத்தும் எழுத்தாளராக இருக்கின்றார்.

ஏனெனில் அரசியல் என்பது முற்றிலும் துறந்தவர்களின் பயணமல்ல. முற்றிலும் துறந்தவர்களுக்கே அரசியல் இருக்கும் காலம் இது. எனவே ஒவ்வொருவரும் தங்களுக்கான இலாபங்களை அடைவதற்கான கடைகளை திறக்கும் நோக்குடன்தான், நமது சூழலுக்குள் கால் வைப்பர். அவர்களுக்கான இலாப நட்டக் கணக்கின் அடிப்படையில்தான், அனைத்தையும் முன்னெடுப்பர். இது ஒரு அரசியல் யதார்த்தம். இந்த இடத்தில் ஒரு கேள்வி முன்வைக்கப்படலாம். அப்படியானால் அவர்களுடன் நாங்கள் எதற்காக பேச வேண்டும்? நாங்கள் சுயாதீனமாக செயற்படலாம்தானே. இது பற்றி கவிதையெழுதலாம். அந்தளவுதான் இதன் பெறுமதி;. இந்த உலக அரசியல் ஒழுங்கில் சுயாதீனம் என்று எதுவுமில்லை. இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கி;ன்றது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயி;ன், ஏனைய நாடுகளிடம்தான் கையேந்த வேண்டும். அவ்வாறு உதவுகின்ற நாடுகள் தங்களுக்கான நலன்களையும் நிறுத்துப் பார்க்க முற்படும். நேரடியாவோ அல்லது மறைமுகமாவோ! பொருளாதார மீட்சில் சுயாதீனம் பற்றி பேசமுடியுமா?

அரசியலும் அப்படித்தான். உண்மையில் அரசியல்தான் அனைத்தினதும் தாய். அரசியலில் எவரும் சுயாதீனமாக இருக்க முடியாது. தமிழ் ஆயுத இயக்கங்கள் எப்போது, தங்களின் இராணுவ ஆற்றலை பெருக்கிக்கொள்ள வெளியாரிடம் உதவிகளை பெற்றார்களோ, அப்போதே அன்னிய தலையீடுகள், நமது அரசியலுக்குள் நுழைந்துவிட்டன. அதனை தடுக்கவும் முடியாது. ஆனால் இவ்வாறான சூழலை எவ்வாறு நமக்கு அதிகம் சேதமில்லாமல் சமாளிக்க முடியுமென்பதுதான் கேள்வி. அவ்வாறு சமாளிப்பதில்தான் நமது கெட்டித்தனம் தங்கியிருக்கின்றது.