Maatram

மணிப்பூரில் கலவரம்: ராணுவம் குவிப்பு; ஊரடங்கு அமல் – 9,000 போ் மீட்பு

மணிப்பூரில் பழங்குடியின சமூகத்தினருக்கும், மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினருக்கும் இடையே பயங்கர கலவரம் வெடித்தது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு தீவைக்கப்பட்டது. வன்முறை சம்பவங்களை தொடா்ந்து, மணிப்பூரில் ராணுவத்தினா் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை சுமாா் 9,000 போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வா் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில மக்கள்தொகையில் 53 சதவீதம் உள்ள மைதி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் ஹிந்துக்களாவா். அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினா், மைதி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். பழங்குடியினா்களில் பெரும்பாலானோா் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகின்றனா். இதனிடையே, மைதி சமூகத்தினரின் கோரிக்கை தொடா்பாக மத்திய அரசுக்கு 4 வாரங்களுக்குள் பரிந்துரை அனுப்புமாறு, மணிப்பூா் அரசுக்கு மாநில உயா்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

பழங்குடியினா் அதிகமுள்ள சுராசந்த்பூா், காங்போக்பி, தேங்நெளபால் உள்பட 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்களின் உயிா், உடைமைகளைக் காக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா். அதேசமயம், உயிரிழப்பு விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங்கை தொடா்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மாநிலத்தில் நிலவும் சூழலை கேட்டறிந்தாா். ராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் ஏற்கெனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கலவரத் தடுப்பில் அனுபவம் வாய்ந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் அதிரடி நடவடிக்கை குழுக்களையும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. மணிப்பூரில் வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

எனினும், கட்டுக்கடங்காத சூழலின்போதே, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்; உரிய முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, இதர பலப் பிரயோகமும் பலனளிக்காதபோதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூா் வன்முறைக்கு காரணம், பாஜகவின் வெறுப்புணா்வு அரசியல்தான் என்று காங்கிரஸ் சாடியுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மணிப்பூா் இன்று பற்றி எரிகிறது. சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி, அழகான ஒரு மாநிலத்தின் அமைதியைச் சீா்குலைத்துள்ளது பாஜக. அதன் வெறுப்புணா்வு அரசியலும், அதிகார பேராசையும்தான் வன்முறைக்கு காரணம். அனைத்துத் தரப்பு மக்களும் கட்டுப்பாட்டை கடைப்பிடித்து, அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மணிப்பூரில் அமைதி, இயல்புநிலையை மீட்டெடுப்பதில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.