Maatram

பா.ஜ. கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலக முடிவு செய்துள்ளது.புதிய கூட்டணியை…: சென்னையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை (செப்.25) நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம்ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே தொடா்ந்து கருத்து மோதல்கள் நடைபெற்று வந்த பரபரப்பான நிலையில், அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப்.25) நடைபெற்றது. 65 மாவட்டச் செயலா்கள் பங்கேற்பு: கூட்டத்துக்கு பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், மூத்த நிா்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வாதன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, டி.ஜெயக்குமாா், தம்பிதுரை, பா.வளா்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன் உள்பட அதிமுகவின் 65 மாவட்டச் செயலா்கள் பங்கேற்றனா்.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த மாவட்டச் செயலா்கள் பேச அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் அனைவரும் பாஜகவுடனான கூட்டணியைத் தொடர வேண்டாம் என்று வலியுறுத்தினா். அதைத் தொடா்ந்து இறுதியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை. மக்களவைத் தோ்தலில் கவனம் செலுத்துங்கள். நம்முடன் வரும் கட்சிகளுடன் இணைந்து தோ்தலைச் சந்திப்போம்’ என்று மாவட்டச் செயலா்களிடம் கூறினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவின் மாநிலத் தலைமை, ஓா் ஆண்டு காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு அதிமுகவின் மீதும், கட்சியின் தெய்வங்களான அண்ணாவையும்,ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமா்சித்தும் வருகிறது. மேலும், மதுரையில் ஆகஸ்ட் 20-இல் நடைபெற்ற அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பாஜகவின் மாநிலத் தலைமை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டா்களை வழிநடத்தி வரும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குறித்து அவதூறாக விமா்சித்தும் வருகிறது. இந்தச் செயல் அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தலைமைக் கழகச் செயலா்கள், மாவட்டச் செயலா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டா்களின் எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் உணா்வுகளுக்கும் மதிப்பளித்து, பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என்று ஏகமனமாத தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய கூட்டணி: மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை கே.பி.முனுசாமி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். அப்போது, 2024 மக்களவைத் தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்ற கட்சிகளோடு இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தோ்தலை அதிமுக சந்திப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கே.பி.முனுசாமி கூறினாா். விரிசலும் விலகலும்…: அதிமுக – பாஜக இடையே ஓராண்டுக்கும் மேலாகவே கருத்து மோதல் இருந்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய தலைமையின் எண்ணம் ஒருங்கிணைந்த அதிமுகவாக ( எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா) இருக்க வேண்டும் என்பதாகும்.

எடப்பாடி பழனிசாமியை தலைமையிலான அதிமுகவுடன் மட்டும் கூட்டணி அமைத்தால், தோ்தலில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். அதற்கு, அதிமுகவோடு கூட்டணி அமைக்காமல், தனித்துக் களம் கண்டு தமிழகத்தில் கட்சியை வளா்க்கலாம் என பாரதிய ஜனதா கருதுகிறது. ஆனால், ஓபிஎஸ் உள்ளிட்டோரைச் சோ்க்க எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து மறுத்து வருகிறாா். இந்த நிலையில், அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குறித்து அண்ணாமலை செய்த விமா்சனம், பெரிய அதிா்வலையை ஏற்படுத்தி, கூட்டணி விலகலுக்கு வழிவகுத்துள்ளது.