Maatram

நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் தயார் -இஸ்ரெலிய பிரதமர்

கடந்த சனிக்கிழமை பாலஸ்தீனிய ஹமாஸ் அமைப்பு திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலிய விமானப்படைகள் காசா மீது குண்டுமழை பொழிகின்றன. சனிக்கிழமை காலை முதல் இஸ்ரேலிய விமானப்படை நடாத்தும் தாக்குதல்களில் 400 க்கும் அதிகமான பாலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மறுபுறம், ஹமாஸ் தொடர்ந்து நடாத்தும் தாக்குதல்களில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், சுமார் 100 பேரை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நீண்ட கடினமானதொரு யுத்தத்திற்கு நாம் தயார் எனவும் யூதர்களின் இப்படுகொலைக்கு பழிவாற்கப்படும் எனவும் நாட்டுமக்களுககு ஆற்றிய உரையில் இஸ்ரெலிய பிரதமர் பென்ஞமின் நெத்தனியாகு தெரிவித்துள்ளார்.

காஸா மீது இரண்டாவது நாளாக குண்டுமழை பொழியும் இஸ்ரேல், அங்கே ஹமாஸ் குழுவினரின் மறைவிடங்களையே குறிவைத்து தாக்கி வருவதாக தெரிவித்துள்ளது. காஸா முழுவதும் உள்ள ஏழு வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நகர மையங்களுக்குச் செல்லுமாறு அல்லது தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேலிய இராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா நடத்தும் பள்ளிகளில் தஞ்சம் புகுந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. .
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்களைத் தொடங்கி 24 மணி நேரத்திற்கும் மேலாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் பாலஸ்தீனியர்கள் ஊடுருவியுள்ள நிலையில் தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேலிய படைகளுக்கும் பாலத்தீன ஆயுதக்குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் தென்பகுதியில் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி ஹாரெட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் காசா எல்லைக்கு அருகில் உள்ள பீரி மற்றும் ஸ்டெரோட் உள்ளிட்ட பகுதிகளில் சண்டை தொடர்கிறது.