Maatram

நியூசிலாந்திடம் நெதர்லாந்து ‘சரண்டர்’: ஐந்து விக்கெட் வீழ்த்தினார் சான்ட்னர்

உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்தின் சான்ட்னர் ‘சுழலில்’ சிக்கிய நெதர்லாந்து அணி 99 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவில், ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் 13வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தின் ராஜிவ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.  முதல் மூன்று ஓவரை ‘மெய்டனாக’ வீசிய நெதர்லாந்து பவுலர்கள் துவக்கத்தில் நெருக்கடி தந்தனர். பின் எழுச்சி கண்ட நியூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே, வில் யங், பவுண்டரிகளாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்த போது வான் டெர் மெர்வி ‘சுழலில்’ கான்வே (32) சிக்கினார். பின் இணைந்த யங், ரச்சின் ரவிந்திரா, நெதர்லாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய யங், ஒருநாள் போட்டியில் தனது 6வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்த போது வான் மீகெரென் பந்தில் யங் (70) அவுட்டானார்.

 மறுமுனையில் அசத்திய ரச்சின் (51) தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். அடுத்து வந்த கேப்டன் டாம் லதாம், பாஸ் டி லீடு வீசிய 36வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேரில் மிட்செல், மீக்கெரென், மெர்வி பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். நான்காவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது மிட்செல் (48) அவுட்டானார். பிலிப்ஸ் (4), சாப்மேன் (5) ஏமாற்றினர். மீக்கெரென் பந்தை சிக்சருக்கு அனுப்பிய லதாம், 43 பந்தில் அரைசதம் அடித்தார். இவர், 53 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய சான்ட்னர், டி லீடு வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 322 ரன் குவித்தது. சான்ட்னர் (36), மாட் ஹென்றி (10) அவுட்டாகாமல் இருந்தனர். நெதர்லாந்து சார்பில் ஆர்யன், மீக்கெரென், வான் டெர் மெர்வி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

கடின இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் (12), மேக்ஸ் ஓ’தவுத் (16) ஏமாற்றினர். பாஸ் டி லீடு (18), தேஜா நிடாமானுரு (21) நிலைக்கவில்லை. பின் இணைந்த கோலின் ஆக்கர்மென், கேப்டன் எட்வர்ட்ஸ் ஜோடி நிதானமாக விளையாடியது. பொறுப்பாக ஆடிய ஆக்கர்மென் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது சான்ட்னர் ‘சுழலில்’ ஆக்கர்மென் (69) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய சான்ட்னர் பந்தில் எட்வர்ட்ஸ் (30), வான் டெர் மெர்வி (1), ரியான் (8) ஆட்டமிழந்தனர். ஹென்றி ‘வேகத்தில்’ சைப்ரண்ட் (29), ஆர்யன் (11) வெளியேறினர். நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் 223 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் சான்ட்னர் 5, ஹென்றி 3 விக்கெட் சாய்த்தனர்.