புனேவில் நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பதுங்கிப் பாய்வதுபோல இருந்தது வங்கதேசத்தின் ஆட்டம். முதல் ஐந்து ஓவர்களில் வெறும் பத்தே ரன்கள். அடுத்த 5 ஓவர்களில் 53 ரன்கள். வங்கதேசத்தின் அதிரடி தொடக்கம் இந்தியாவுக்கு சற்று அச்சுறுத்தலாக அமைந்தது.
தன்சித் ஹஸன் 41 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியா 3 பந்துகள் மட்டுமே வீசினார். காயம் காரணமாக மைதானத்தை விட்டு அவர் வெளியேற எஞ்சிய 3 பந்துகளை விராட் கோலி வீசினார். மைதானம் அதிர்ந்தது. 3 பந்துகளை வீசி 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் கோலி.
மிடில் ஓவர்களில் குல்தீப்பும், ஜடேஜாவும் இணைந்து சுழற்பந்துவீச்சுத் தாக்குதலை தொடுத்தனர். குல்தீப் யாதவ், ஹஸனை வீழ்த்தினார், முதல் விக்கெட் பார்னர்ஷிப் 93 ரன்களுடன் முடிவுக்கு வந்தது அடுத்து வந்த ஷாண்டோ ஜடேஜாவிடம் அகப்பட்டார்.
மெஹுதி ஹசன் 3 ரன்களில் வெளியேற, வங்கதேசத்தின் நம்பிக்கையாக அதுவரை திகழ்ந்து கொண்டிருந்த லிட்டன் தாசும் 66 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் வீழ்ந்தார். லிட்டன் தாஸ் 62 பந்துகளில் அரைசதம் விளாசியிருந்தார்.
சுழலை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேசத்தின் ரன் வேகம் குறையத் தொடங்கியது. இடையிடையே விக்கெட்களும் சாய்ந்தன. மஹ்முதல்லாவும், முஷ்ஃபிகுர் ரஹீமும் தங்கள் பங்கிற்கு நிதானமாக ஆடி ரன்களை சேர்க்க வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 256 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி 257 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது. ரோஹித் – கில் கூட்டணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் என சதமும் அரைசதமுமாக ஆடி வரும் ரோஹித் வங்கதேசத்திற்கு எதிராக 2 ரன்களில் அரைசதத்தை நழுவ விட்டார். களத்தில் நங்கூரமிட்ட கில், சற்று பொறுமையாக ஆடினாலும் 52 பந்துகளில் அரைசதம் விளாசினார். ஆனால் அடுத்த 3வது பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார்.
விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஜோடி மெல்ல ரன் குவிப்பைத் தொடங்கியபோது ஷ்ரேயாஸ் 19 ரன்களில் ஏமாற்றினார். விராட் கோலி வழக்கம்போல ரசிகர்களுக்கு இந்த முறையும் விருந்து படைத்தார்.
பேட்டில் இருந்து ஒவ்வொரு முறை பவுண்டரிக்கு பந்துகள் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நிதானம் காட்டிய கோலி 48 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார்.
மொத்தம் 97 பந்துகளை எதிர்கொண்ட கோலி 4 சிக்சர், 6 பவுண்டரிகள் விளாசி 103 ரன்கள் விளாசினார். வெற்றிக்கு வித்திட்ட கோலிக்கு ஆட்டநாயகம் விருது வழங்கப்பட்டது. கே.எல் ராகுல் 34 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து கோலியுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து நான்கு முறை வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்த்து ஞாயிறுக்கிழமை களமிறங்குகிறது.