Maatram

பாகிஸ்தான் முன் நாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை!

நாட்டின் ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என இம்ரான் கான் எதிர்வினையாற்றியுள்ளார்.

இந்த வழக்கின் பின்னணி என்ன?

மார்ச் 2022-ல் அமெரிக்காவில் அந்நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் உடன் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் பங்கேற்றார். அப்போது அங்கு பேசப்பட்ட முக்கிய விவகாரங்கள் உள்ளடக்கிய ரகசிய ஆவணங்களை இஸ்லாமாத்திற்கு அனுப்பி வைத்தார்.

மார்ச் 2022-ல் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேடையில் பேசிய இம்ரான் கான் தனது ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் திட்டம் போடுவதாகக் கூறி தனது சட்டைப்பையில் இருந்து ஒரு காகித் துண்டை வெளியே எடுத்துக் காட்டினார்.

இம்ரான் கான் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டால் அனைவரும் மன்னிக்கப்படுவீர்கள் என அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாக இம்ரான் கான் கூறினார். இதற்கு பின்னணியில் எந்த நாடு இருக்கிறது என்பதை இம்ரான் கான் வெளிப்படையாக சொல்லவில்லை.

அதேசமயம், அவர் அமெரிக்காவை விமர்சிக்கவும் தவறவில்லை. இந்த சம்பவம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது.

தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி வேலை நடப்பதாக இம்ரான் கான் முன்வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா நிராகரித்தது.

பாகிஸ்தான் தூதர் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பிய ரகசிய தூதரக கடிதங்களை பொதுவெளியில் பிரதமரே பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியிலும் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் சந்தேகம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இம்ரான் கானின் பதவி பறிபோன பிறகு, ஜூலை 2023-ல் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் 1923-ன் படி, முன்னாள் பிரதமர் மீது அரசு ரகசியங்களை பொது வெளியில் கசியவிட்டதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் அரசு வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துமாறு நீதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கை விசாரித்த பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம், இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரைஷி ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்றத் தீர்ப்பு கேலிக்கூத்தானது என்றும் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தெரிவித்துள்ளது.