Maatram

மாலத்தீவு அதிபருக்கு பெரும் சிக்கல்.. பறிபோகிறதா பதவி?

மாலத்தீவில் சீனா ஆதரவு நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிபரை தகுதி நீக்கம் செய்யும் வகையில் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்திய பெருங்கடலில் உள்ள மிக குட்டி நாடு மாலத்தீவு. ஆனால் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சரக்கு கப்பல் போக்குவரத்தில் மிக முக்கியமான இடத்தில் உள்ளது மாலத்தீவு. இதனால் இந்தியா, சீனா நாடுகளின் தாக்கம் மாலத்தீவு அரசியலில் உள்ளது. வெறும் 5.21 லட்சம் மட்டுமே மக்கள் தொகை கொண்ட மாலத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. ஆனால், கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் தலைகீழாக மாறியது.

சீனா ஆதரவு நிலைப்பாடு கொண்ட அதிபர் முகம்மது முய்சு அதிபராக பதவியேற்ற பின் அந்த நாடு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியது. இது ஒருபக்கம் இருக்க, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் நடந்து கொண்டது அமைந்தது. அதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிரதமர் மோடி இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு சென்றார்.

லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி தொடர்பாக இனவெறியுடன் கருத்துக்களை கூறி விமர்சித்தனர். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டது. இந்தியர்கள் பலரும் மாலத்தீவு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்ததை ரத்து செய்தன

இதனால் சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பிக்கொண்டு இருந்த மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. மாலத்தீவு ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் முகம்மது சோலி இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் ஆவார். மாலத்தீவு நாடாளுமன்றத்தில் நேற்று எம்பிக்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

கேபினட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நோக்கத்தில் கொண்டு நாடாளுமன்றம் கூடியது. ஆனால், அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கும் நோக்கில் நடைபெறும் வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எதிர்கக்ட்சி கோரியது. இதனால், ஆளும் கட்சிக்கு எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் கைகலைப்பு ஏற்பட்டது. மாலத்தீவு அரசியலில் இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.