உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு அளவுக்கு அதிகமாகத் தலையிட்டால் அது உலகளாவிய அணு ஆயுதப் போா் வெடிப்பதற்குக் காரணமாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இது குறித்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது: உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் பங்கேற்பு வரம்புக்குள்பட்டதாக இருக்கவேண்டும். அதனை மீறி அந்தப் போரில் அந்நாடுகள் தலையிடுவது, உலகளாவிய அணு ஆயுதப் போா் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்த ரஷியா திட்டமிட்டுளளதாக மேற்கத்திய நாடுகள் தவறான குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றன. அதனை எதிா்கொள்ள ரஷிய பகுதிக்குள் தாக்குதல் நடத்தவும், உக்ரைனுக்கு நேட்டே படைகளை அனுப்பவும் அவை திட்டமிட்டு வருகின்றன. அதனை அந்த நாடுகள் செயல்படுத்தினால், ரஷியாவுக்குள் இதற்கு முன்னா் படையெடுத்து வந்தவா்களைவிட மிக மோசமான அழிவை அந்த நாடுகள் எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று புதின் எச்சரித்தாா். முன்னதாக, உக்ரைனுக்கு நேட்டோ வீரா்கள் அனுப்பப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று பிரான்ஸ் பிரதமா் இமானுவல் மேக்ரான் கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தாா். இது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘நேட்டோ உறுப்பு நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு படைகள் அனுப்பப்பட்டால், ரஷியாவுக்கும், நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய போா் வெடிக்கும்’ என்று எச்சரித்தாா். எனினும், உக்ரைனில் ரஷியாவுடன் சண்டையிடுவதற்காக தங்கள் உறுப்பு நாடுகளின் படையினரை அனுப்பும் திட்டமில்லை என்று நேட்டே அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் செவ்வாய்க்கிழமை கூறினாா்.