Maatram

தமிழ் பொது வேட்பாளர் – நிதானம் அவசியம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்து வது தொடர்பில் சிவில் சமூகக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றன. எனினும், இது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தி யில் இதுவரையில் உத்தியோகபூர்வமான இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் ‘மக்கள் மனு’ – வடக்கு, கிழக்கு சிவில் சமூகக் குழுவானது மக்கள் மத்தியில் சந்திப்பு களை நடத்திவருகின்றது. அந்த வகையில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை மக்கள் எண்ணக்கருவாக மாற்றும் விடயத்துக்கு ‘மக்கள் மனு’ சிவில் சமூகக் குழு தலைமை தாங்கி வருகின்றது. இது அடிப்படையில் ஒரு வெகுசன ஈர்ப்பை ஏற்படுத்தும் நடவடிககையாகும்.
கட்சிகளைப் பொறுத்தவரையில் ஐந்து கட்சிகளின் கூட்ட மைப்பான ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மட்டுமே அதன் உத்தி யோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை கொள்கைரீதியில் ஆதரிப்பதென்று அவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் பேசுவதென்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
தீர்மானித்திருக்கின்றது.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் இதுவரையில் நடந் திருப்பது இவைகள் மட்டுமே. தமிழ்த் தேசிய அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் கட்சிகளே
அரசி யலை கையாளும் முதன்மை அங்கமாகும்.
அவ்வாறான கட்சிகள்மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் – தேவைப்படும்போது ஓரணியாக இணைந்து செயல்படும் விடயங்களையே சிவில் சமூக குழு ஒன்றால் மேற்கொள்ள முடியும். இதேவேளை கட்சிகள் தமிழ் மக்களின் நலன்சார் விடயங்களை தேசம் தழுவியதாக முன்னெடுக்கும்போது சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய புத்திஜீவிகளையும் இணைத்துக் கொண்டே விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளும் ஓரணியாக நிற்பதே இந்த விடயத்தில் வெற்றி பெறுவதற்கான
முதல்படியாகும்.
ஒரு குறித்த தனிக்கட்சி விடயங்களை முன்னெடுப்பதாகக் காண்பிப்பது பொருத்தமானதல்ல. அவ்வாறான முயற்சிகள் விடயத் தின்மீதான கட்சிகளின் ஈடுபாட்டை பலவீனப்படுத்துவதுடன் தேவையற்ற சந்தேகங்களையும் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தும். இந்த விடயத்தில் மக்கள் மனு சிவில் சமூகத்தின் அணுகுமுறை நிதானமானதாகவும் அனைவரையும் சமநிலையில் கையாளுவதாகவும் இருக்கின்றது.
அவ்வாறான அணுகுமுறைதான் இந்த விடயத்துக்குத் தேவையானது. தமிழ் பொது வேட்பாளர் யார்?, எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது?, இதற்கான கட்மைப்புகளை எவ்வாறு உருவாக்குவது? இப்படியான கேள்விகள் இப்போது அவசியமற்றவை.
முதலில் தமிழ்த் தேசிய அரசி யலை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில் பெரும்பாலானவை ஓரணியில் வரவேண்டும். அதனைத் தொடர்ந்து, கட்சிகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்ததாக விடயங்களை நெறிப்படுத்து வதற்கான கட்டமைப்பு தொடர்பில் சிந்திக்கலாம். ஆனால், விடயங்கள் ஒரு சரியான திசையில் பயணிப்பதற்கு முன்ப தாகவே கட்டமைப்பு – குறிப்பாக நிதி தொடர்பில் பேசுவதானது இந்த விடயத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு உறுதுணையாக இருக்காது. இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டே அனைவரும் இந்த விடயத்தை கையாள முற்பட வேண்டும். தமிழ் பொது வேட்பாளர் விடயம் சாதாரணமான ஒன்றல்ல, தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம். அளவுக்கதிகமான சமையல்காரர்கள் இணைந்து உணவைப் பழுதாக்கியதாக இந்த முயற்சி அமைந்துவிடக்கூடாது.

ஈழநாடு தலையங்கம்