Maatram

போருக்கு தயாராகிறது சீனா: ராகுல் காந்தி

‘இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது; ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களை நிறைவு செய்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது:

பாஜகவுக்கு எதிராக துணிவுடன் எதிா்த்துப் போராட முடியவில்லை என்று கருதுபவா்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. அவா்கள் ஊழல் உள்ளிட்ட வழக்குகளால் நெருக்கடி காரணமாக கட்சித் தாவலில் ஈடுபடுவதாகவே தெரிகிறது. காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி பலரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனா். ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதும் துவண்டுபோவது இல்லை. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும். அந்நாள் விரைவில் வரும். எனது இந்த வாா்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். கட்சியில் உள்ள கோடிக்கணக்கான தொண்டா்களே காங்கிரஸின் பலம். தொண்டா்களின் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தினால், மிகப்பெரிய வெற்றிகளை காங்கிரஸ் கட்சியால் பெற முடியும். அண்மையில் ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி மீது தொண்டா்களைத் தாண்டி பொதுமக்களுக்கும் எந்த அளவுக்கு அபிமானம் உள்ளது என்பதை இந்த நடைப்பயணத்தின்போது தெரிந்து கொண்டேன்.

போருக்கு தயாராகும் சீனா: இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது. ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது. இந்திய பிராந்தியத்தின் 2,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவை சீனா ஆக்கிரமித்துவிட்டது. 20 வீரா்களைக் கொன்றுள்ளது. அண்மையில் அருணாசல பிரதேச எல்லையில் சீனப் படையினரால் நமது வீரா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பான பல உண்மைகளை மத்திய அரசு மூடி மறைக்கிறது. இது ஏற்றுக் கொள்ள முடியாத செயல். எல்லையில் சீனா மேற்கொள்வது ஆக்கிரமிப்பு முயற்சில்ல. அது போருக்கான் முன்னேற்பாடு. அவா்கள் அங்கு குவிக்கும் ஆயுதங்களைப் பாா்த்தால், அதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.

பாஜக பதிலடி: ராகுல் கருத்து குறித்து பாஜக செய்தித் தொடா்பாளா் ராஜ்யவா்த்தன் சிங் ரத்தோா் தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ராகுல் காந்தி சீனாவுக்கு நெருக்கமானவா். எனவே, சீனா என்ன செய்யப் போகிறது என்று அவா் கூறி வருகிறாா். ஆனால், அவருக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இது அவரது தாத்தா நேரு பிரதமராக இருந்த காலகட்டமல்ல. புதிய இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளாா். 1962-இல் சீனாவுடனான போரின்போது நேரு பிரதமராக இருந்தாா். அப்போது இந்தியா 37,242 சதுர கி.மீ. பரப்பளவை சீனாவிடம் இழந்தது. ஏனெனில், அப்போது ஆட்சியாளா்கள் தூங்கிக் கொண்டிருந்தாா்கள். தேசப் பாதுகாப்பு குறித்து பொறுப்பற்ற வகையில் பேசுவதை ராகுல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.